தஞ்சாவூர்: வளர்ந்து வரும் மாநகரான கும்பகோணத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல், குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், சட்டம் ஒழுங்கை தொடர்ந்து நல்ல நிலையில் பராமரிக்கவும், குற்றச்சம்பவங்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்திடவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கும்பகோணத்தில் உள்ள முக்கிய நகர் பகுதிகளை 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு செய்திட ஏதுவாக 'டெல்டா காப் -பைக் பேட்ரோல்' என்ற புதியதொரு முயற்சியை மேற்கொண்டுள்ளனர் தஞ்சாவூர் போலீசார். இதற்காக பிரத்யேகமாக ஐந்து இருசக்கர வாகனங்களை ஒதுக்கி இரு பெண் போலீசார் உட்பட மொத்தம் 10 போலீசார் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பிரத்யோக உடை, சைரன், கேமரா, வாக்கி டாக்கி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
இந்த 5 வாகனங்களுக்கு கும்பகோணம் காந்தி பூங்காவை மையமாகக் கொண்டு தனித்தனி பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வாகனம் 06க்கு ஏஆர்ஆர் ஆர்ச் பகுதியை மையமாக கொண்டும், வாகனம் 07சிஆர்சி ரவுண்டானா பகுதியை மையமாகக் கொண்டும்,
வாகனம் 08 அரசு மருத்துவமனை பகுதியை மையமாக கொண்டும் செயல்படவுள்ளது. மேலும் வாகனம் 09 மேலக்காவேரி பகுதியை மையமாக கொண்டும், வாகனம் 10 மகளிர் வாகனம் மாநகரின் செட்டிமண்டபம் முதல் தாராசுரம் வரை மற்றும் பெரிய கடைவீதியை மையப்படுத்தி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான தலைமை கட்டுப்பாட்டறை கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 'டெல்டா காப் - பைக் பேட்ரோல்' இருசக்கர வாகன சேவை அறிமுகப்படுத்தும் விழா கும்பகோணம் உள்ள 'மகாமகம்' குளம் அருகே எளிமையாக நடைபெற்றது.
இந்த விழாவில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் முன்னிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்அப் பச்சை வண்ண கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து இந்த இருசக்கர வாகனங்கள் மாநகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த டெல்டா காப் பைக் பேட்ரோல் சேவை காவல்துறை சேவையில் கூடுதல் சிறப்பம்சமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில், கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன், திருவிடைமருதூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக், தஞ்சை மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் மணி வேல், கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளர் சிவ. செந்தில் குமார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர், வணிகர் சங்க நிர்வாகிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 300 மூட்டை அரிசி, 200 கிடா கறி.. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கம கம கறி விருந்து!