திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் 3ம் படையான பழனி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜன.19ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. இந்த நிலையில் நாளை (ஜன.25) தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் ஆடிப்பாடி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது தைப்பூசத் திருவிழாவிற்காகப் பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் பல ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இதனிடையே மாவட்ட காவல் துறையும் போலீசார் தரப்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பக்தர்கள் பாதுகாப்புக்காக தென் மண்டல ஐ.ஜி தலைமையில் சுமார் 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் கிரிவலப் பாதையில் சுமார் 350க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்பட்டுக் கண்காணிக்கப்பட உள்ளனர். அதுமட்டுமின்றி பெண்கள், குழந்தைகளுக்காகப் பெண் காவலர்கள் மட்டுமே இயக்கும் தோழி வாகன ரோந்தையும் மாவட்ட எஸ்.பி பிரதீப் துவக்கி வைத்து, நவீன கேமராக்களுடன் கூடிய எல்இடி திரை கண்காணிப்பு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பக்தர்கள் கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகள் வயதானவர்களைக் கண்டறிய க்யூஆர் கோடு முறையில் உள்ள பேண்ட் கட்டும் சோதனை முறையையும் துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் டிஎஸ்பி சுப்பையா, ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட எஸ்.பி பிரதீப் கூறியதாவது, "திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாகத் தைப்பூசத் திருவிழாவில், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். வாகனங்களும் பழனிக்கு வந்து சிரமம் இன்றி திரும்பிச் செல்ல அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றுப்பாதைக்காகவே தனியாக 500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கூட்டத்தில் நிகழும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள 20 கிரைம் டீம் வந்துள்ளனர். அவர்கள் முழு கண்காணிப்பில் ஈடுபடுவார்கள், சந்தேகப்படும்படியாக இருந்தால் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.
கடந்த ஆண்டு திருவிழாவில் நிறையக் குழந்தைகள் காணாமல் போனார்கள், அதனைச் சரிசெய்ய ரிஸ்ட் பேண்டு (wrist band) குழந்தைகள் கைகளில் கட்டப்படும். அதில், குழந்தைகளின் பெற்றோரின் தகவல் மற்றும் தொலைப்பேசி இருக்கும். ஒருவேளை குழந்தை காணாமல் போனால், அருகில் உள்ள காவலர்கள் அந்த க்யூஆர்ஐ ஸ்கேன் செய்தால், அவரது பெற்றோரின் செல்போனுக்கு உடனடியாக அழைப்பு செல்லும்" என தெரிவித்தார்.
இதனிடையே, பழனி முருகன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஒரே நேரத்தில் சுமார் 72 பேர் பயணிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மின் இழுவை ரயிலைப் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இன்று அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.
இதையும் படிங்க: பழனியில் புதிய மின் இழுவை ரயிலைத் துவக்கி வைத்த அமைச்சர்; பக்தர்கள் மகிழ்ச்சி!