விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்யில் உள்ள விக. சாலையில் நடைபெற்றது. தவெக கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின் நடத்தப்படும் முதல் மாநில மாநாடு இதுவாகும். எனவே, விஜய் என்ன பேசப் போகிறார் என்பதை எதிர்பார்த்து மக்களும், தொண்டர்களும், ரசிகர்களும், அரசியல் கட்சிகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
முன்னதாக தொண்டர்கள் மத்தியில் காட்சியளித்த விஜய், நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் தொண்டர்களை வரவேற்கும் விதமான, மேடையுடன் இணைக்கப்பட்டிருந்த நடைபாதையில் நடந்துசென்று அவர்களை கையசைத்து வரவேற்றார். அப்போது, தொண்டர்கள் தங்கள் கையில் இருந்த கட்சிக் கொடி துண்டுகளை விஜய்யின் மீது வீசி வரவேற்றனர்.
அந்த நேரத்தில் கீழே விழுந்த துண்டுகளை எடுத்து தன் தோளில் போட்டபடி தொண்டர்களின் ஆரவாரங்களுக்கு இடையே நடந்து சென்றார். இதனை தொடர்ந்து தவெக கொள்கை குறித்து பேராசிரியர் சம்பத் விளக்கினார். பின்னர் தவெக நிர்வாகி கேத்ரின் பாண்டியன், அக்கட்சியின் செயல் திட்டங்களை விஜயிடம் இருந்து பெற்று அறிவித்தார்.
இதையும் படிங்க: ‘வெற்றி வாகை’ எனும் தவெக கொள்கை பாடல்: அதில் விஜய் சொல்லியது என்ன?
தவெகவின் செயல் திட்டங்கள்
- தவெக ஆட்சியில் அரசியல் தலையீடு இல்லாத நிர்வாக சீர்திருத்தம்- ஊழலற்ற நிர்வாகம்
- ஜாதி, மத சார்பின்மையுடன் அரசு நிர்வாகம்
- எம்.எல்.ஏ அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டு நெறி முறைப்படுத்தப்படும்
- மதுரையில் தலைமை செயலக கிளை அமைக்கப்படும்,
- விகிதாச்சார இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்
- தமிழே ஆட்சி மொழி- வழக்காடு மொழி இருக்கும்
- இரு மொழி கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்
- கீழடி உள்ளிட்ட அகழாய்வுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
- மாநில தன்னாட்சி உரிமை மீட்பு, மாநிலப் பட்டியலுக்கு கல்வியை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்
- ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்
- நிர்வாக பதவிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் ஆகியவை 3ல் 1 பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்படும். அது படிப்படியாக உயர்த்தப்பட்டு 50 சதவீதம் பெண்கள் 50 சதவீதம் என கொண்டு வரப்படும்
- பதநீர் மாநில பானமாக மாற்றப்படும்
- குழந்தைகள், பெண்கள், மற்றும் முதியோர்களுக்கு தனித்துறை உருவாக்கப்படும்