சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் இரண்டாம் ஆண்டு கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் கட்டமாக 21 மாவட்ட தொகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்றது. இந்நிலையில், மீதமுள்ள மாவட்ட மாணவ மாணவிகளுக்கு இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் நாளை (ஜூலை 2) நடைபெறுகிறது.
செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 740க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் என பெற்றோருடன் சேர்த்து மொத்தம் 3,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோன்று, முதற்கட்டமாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மண்டபத்திற்கு அதிகாலை 6 மணியளவில் வந்த தவெக தலைவர் விஜய், இந்த முறையும் முன்கூட்டியே வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.