சென்னை: இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பட்டு, உயிர்நீத்ததை நினைவுக்கூறும் வகையில் கிறிஸ்தவர்கள், ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிக்கின்றனர். அதன் நிறைவாக இயேசு உயிர்த்தெழுந்த நாளான இன்று, ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நடிகரும் தவெக தலைவருமான விஜய் ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், நடிகர் விஜய். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'லியோ' என்ற படத்தில் நடித்து இருந்தார். இத்திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் வசூலித்தது.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட் (GOAT)' என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் அவர் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காதா, மாநாடு போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதேபோல் இப்படமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரபு தேவா, பிரசாந்த், மீனாக்ஷி சவுத்ரி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இதற்காக 'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்' (AI TECHNOLOGY) பயன்படுத்தி விஜய்யின் தோற்றத்தை புதிதாக உருவாக்கி உள்ளனர்.
இந்த நிலையில் இன்னும் இரண்டு படங்கள் நடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக ஈடுபடவுள்ளதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, 2026 சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பலாப்பழம் சின்னத்தில் போட்டி - மற்ற 4 ஓபிஎஸ் பெற்ற சின்னங்கள் என்ன