கரூர்: குளித்தலை நகரப் பகுதியைச் சேர்தவர் முன்னாள் ராணுவ வீரர் டோமினிக் பிரபாகரன், இவரது மனைவி சங்கீதா(44). இவர் குளித்தலை அருகே குப்பாச்சிபட்டியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் குளித்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: "தனது கணவர் டோமினிக் பிரபாகரன் முன்னாள் ராணுவ வீரர். இவர் கடந்த ஆண்டு சாலை விபத்தில் காலமானார். இவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கினோம். எங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை விற்று வருவதாக கூறி, குளித்தலை அருகே உள்ள கோட்டைமேடு கடைவீதியில் வசித்து வரும் பழனியப்பன் மகன் ராஜா(40). என்பவர் அறிமுகமானார்.
நில ஆவணங்களை வைத்து மதுரை தல்லாகுளத்தில் உள்ள மனபுரம் பைனான்ஸில் ரூபாய் 8 லட்சம் கடன் பெற்று தருவதாக கூறியதால் ஆதார் அட்டை, சம்பள ரசீது, வங்கி கணக்கு பரிவர்த்தனை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று எனது பெயரில் புதிய கார் வாங்கியுள்ளார். தனக்கு நான்கு சக்கர புதிய கார் வேண்டாம் என கூறி ஆவணங்களை திரும்ப கேட்ட பிறகு தருவதாக கூறியதால் நம்பியிருந்தேன்.
ஆனால் அடுத்த மாதம் எனது வங்கிக் கணக்கில் இருந்து கார் கடன் பெற்றதற்காக ரூ.19.600 முதல் தவணை எடுக்கப்பட்டது. வங்கிக்கு நேரில் சென்று விசாரித்த போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். இந்த விவகாரம் குறித்து ராஜாவிடம் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குளித்தலை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகாரைப் பெற்ற குளித்தலை உதவி ஆய்வாளர் பிரபாகரன் வழக்குப் பதிவு செய்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ராஜாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்