சென்னை: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டுதோறும், தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகள், 2008ன் படி மொத்த விலைக்குறியீட்டின் அடிப்படையில் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.
நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் மாற்றியமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் முடிந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் சுங்கக்கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியது.
இந்த நிலையில், தற்போது செப்டம்பர் மாதத்திற்கான சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது என்றும், சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை, ஓமலூர் உட்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளின் பயனர் கட்டணம் உயர்த்தப்படும் காரணத்தால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளின் சரக்குக் கட்டணம் உயரும் என்று கோயம்பேடு வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் 2023-24ஆம் ஆண்டில் ரூ.4,221 கோடியை வசூலித்து, நாட்டிலேயே அதிக சுங்க கட்டணம் வசூலித்த மாநிலங்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இது 2022-23ஆம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட ரூ.3,817 கோடியை விட 10 சதவீதம் அதிகமாகும். அதேபோல, உத்தரப் பிரதேசத்தில் ரூ.6,961 கோடி, ராஜஸ்தானில் ரூ.5,954 கோடி, மகாராஷ்டிராவில் ரூ. 5,352 கோடி மற்றும் குஜராத்தில் ரூ.4,781 கோடி என வசூலிக்கப்பட்டு, முதல் நான்கு இடங்களில் உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரையில், எல்&டி கிருஷ்ணகிரி தொப்பூர் சுங்கச்சாவடி அதிகபட்சமாக ரூ.269 கோடி வசூல் செய்து முதலிடத்திலும், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி ரூ.257 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: உஷார் மக்களே..! பிளிப்கார்ட்டில் பரிசுத்தொகை விழுந்ததாக கூறி ரூ.18 லட்சம் மோசடி.. தேனி நபர் ஏமாந்தது எப்படி?