சென்னை: தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 6 ஆம் தேதி வெளியிடப்பட்டன.
அதில், 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மேலும், மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல் பெறுவதற்கோ அல்லது மறு கூட்டலுக்கோ மே 7 ஆம் தேதி முதல் மே 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து விடைத்தாள் நகல் பெறுவதற்கு 49 ஆயிரத்து 245 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அதன் பின்னர் மறுமதிப்பீடு, மறுக்கூட்டலுக்கு விண்ணப்பம் செய்த மாணவர்களின் விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு, அவர்களுக்கான முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று (ஜூன்.18) வெளியிடப்பட்டுள்ளன.
அதில் மாணவர்களின் மதிப்பெண் மாற்றம் இருந்தால் மட்டுமே அவர்களின் பதிவு எண் இருக்கும். மதிப்பெண் மாற்றம் இல்லாவிட்டால், மாணவரின் பதிவு எண் இருக்காது என அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் விடைத்தாள் நகல் பெறாமல் மறுக்கூட்டலுக்கு நேரடியாக விண்ணபித்த 1,540 மாணவர்களில் 19 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் விடைத்தாள் நகல் பெற்றப் பின்னர் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பித்த 175 மாணவர்களில் 131 மாணவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் வந்துள்ளது. மேலும், மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்த 3,632 மாணவர்களில் 2,178 மாணவர்களுக்கு மதிப்பெண்களில் மாற்றம் வந்துள்ளது என அரசுத் தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாணவர்களை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூல்? - தனியார் பள்ளி மீது கோவை கலெக்டரிடம் பெற்றோர் புகார் - Kovai Private School RTE Students