சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15 ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையேற்று பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நாகேஸ்வர ராவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பு: இந்த பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணித்தார். சமீபத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவதில் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.
6,940 பட்டம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 15 ஆவது பட்டமளிப்பு விழாவில் 6,940 பேர் பட்டம் பெற்றனர். இவர்களில் 329 பேருக்கு நேரடியாக தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார். மீதமுள்ள 6,611 பேர் அஞ்சல் மூலமாக பட்டம் பெற்றுள்ளனர். இதில் 1,917 பேர் முதுநிலைப் பட்டம், 3,455 பேர் இளநிலை பட்டம், 1,550 பட்டய மாணவர்கள் பட்டம், 18 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
காமன்வெல்த் விருது: ஒவ்வொரு ஆண்டும் காமன்வெல்த் கல்விக் கழகத்தின் சார்பாக (CEMCA) ஊடக மையம் தகவல் மற்றும் தொழில்நுட்ப பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவிகளில் ஒருவருக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினை இந்த ஆண்டு முதுநிலை கணினி அறிவியலில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி லதா பெற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க: சூடுபிடித்த தீபாவளி பர்ச்சேஸ்.. தி.நகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்!
பட்டம் பெற்ற முன்னாள் எம்எல்ஏ: இந்த பட்டமளிப்பு விழாவில் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனபால், குற்றவியல் செயலால் மாணவர்கள் இடைநிற்றல் குறித்து ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறும்,"போது சிறு வயதில் குற்றங்களை செய்யும் மாணவர்கள் தங்கள் படிப்பினை இடையில் நிறுத்தி விடுகின்றனர். சிறார் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளதாக" தெரிவித்தார்.
கோவை கேபிஆர் மில் மாணவர்கள் சாதனை: இந்த பட்டமளிப்பு விழாவில் கோயம்புத்தூரில் இயங்கி வரும் கேபிஆர் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் 556 இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் பட்டம் பெற்றுள்ளனர். குறிப்பாக இதில் 11 மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி வெண்கல பதக்கங்களை பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
இது குறித்து கேபிஆர் மில் நிறுவனத்தில் இருந்து படித்து பட்டங்களை பெற்ற மாணவிகள் கூறுகையில்,"குடும்ப சூழ்நிலை காரணமாக எங்களால் படிக்க முடியாத சூழ்நிலை இருந்தது. அப்போதுதான் கேபிஆர் நிறுவனம் குறித்து எங்களுக்கு தெரியவந்தது. இங்கு படித்துக் கொண்டே பணியும் செய்யலாம், இதற்கான அனைத்து வசதிகளையும் நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.இதனால் தங்கள் குடும்பங்களை பார்த்துக் கொண்டு எங்களால் படிக்கவும் முடிந்தது. படித்தவுடன் நிறுத்திவிடமால் அதற்கு அடுத்த கட்டமாக அரசு பணியில் சேர்வதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதற்கு உறுதுணையாக இருந்த எங்களுடைய சேர்மேன் ராமசாமி அவர்களுக்கு இந்த நேரத்தில் நாங்கள் நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்" எனத் தெரிவித்தனர்.