தேனி: தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில், தேனியில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமையில், தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் முதல்வர்கள், தாளாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பிலும், பெற்றோர்கள் சார்பிலும் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர் கல்விக் கட்டணம் கட்டாமல், டி.சி பெறாமல் வேறு பள்ளிக்கு மாற்றி சேர்த்து விடுகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது.
இதனைத் தடுக்கும் விதமாக, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் டி.சி சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டணம் பாக்கி இல்லை என்ற சான்றிதழ்கள் இல்லாமல், எந்த மாணவர்களையும் பள்ளியில் புதிதாக சேர்க்கக் கூடாது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. எனவே, இது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணை வெளியிட வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர்.
மேலும், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்குவது போல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்க வேண்டும். அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களின் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டுக்கான கட்டணம் இன்னும் வழங்கவில்லை. சுமார் ரூ.500 கோடிக்கான கட்டணம் நிலுவையில் உள்ளது. அதனை உடனே அரசு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்