புதுக்கோட்டை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை வடக்கு பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்ல பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்து ராஜா ஆகியோர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது செய்தியாளரிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில் 2004ஆம் ஆண்டு மற்றும் 2009ஆம் ஆண்டின் தேர்தல் கருத்துக் கணிப்புகள் பாஜக தான் வெற்றி பெறும் எனக் கணித்த நிலையில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிகள் ஆட்சியைப் பிடித்தது அது போல் இந்த முறையும் தேர்தல் கணிப்பு தவிடுபொடியாகும் எனக் கூறியுள்ளார். மேலும் பாஜக இமாச்சல், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் மக்களவை தொகுதிகளைவிட அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி அடையும் என்று கருத்துக்கணிப்பு கூறுவது வங்காள விரிகுடாவை நோக்கி இந்தியாவில் புது தொகுதிகள் உருவாக்கப்பட்டது போல் இருக்கிறது.
இந்தியாவில் இல்லாத அளவிற்குத் தேர்தல் ஆணையம் தொகுதிகளை அதிகரித்து விட்டார்களா என்று தெரியவில்லை, வங்காள விரி குடாவிற்குக் கிழக்கையோ அரபிக் கடலுக்கு மேற்கையோ தொகுதிகளை உருவாக்கி விட்டார்களா என்றும் தெரியவில்லை. எனவே இது நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் சேர்ந்து இந்த கருத்துக் கணிப்புகளை வெளியிட்டது போலத் தெரிகிறது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கண்ண மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் 40க்கு 40 மக்களவை தொகுதியும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். இதில் எந்த கருத்துக்கணிப்பும் எதுவும் பண்ண முடியாது. பாஜக அதிக வாக்கு சதவீதம் பெருக்கிறதா என்பதை வாக்கு எண்ணிக்கைக்கு பிறகுதான் தெரியும்.
இதையும் படிங்க: “பாஜக ஆட்சி நாளை முடிவுக்கு வரப்போகிறது” - செல்வப்பெருந்தகை தாக்கு!