சென்னை: வங்கதேசத்தைச் சேர்ந்த முதியவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியுடன் சென்னை விமான நிலையத்தில் 2 நாட்களாக தவித்து வந்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், தமிழக அரசு முன்வந்து அவர்களுக்கு உதவி செய்து இன்று விமானம் மூலம் அவர்களை வங்கதேசத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த சுசில் ரஞ்சன்(73), புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவி புரோவா ராணிக்கு (61) சிக்ச்சை அளிப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். அதன் பின்பு வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் மனைவியை சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது மனைவியுடன் சொந்த நாடான வங்கதேசத்திற்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி கடந்த திங்கட்கிழமை பகல் 2 மணி அளவில் சென்னையில் இருந்து வங்கதேசம் தலைநகர் டாக்கா செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மனைவியுடன் பயணம் செய்வதற்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்திருந்தார். அதன்படி, இருவரும் சென்னை விமான நிலையம் வந்துள்ளனர்.
ஆனால் வங்கதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக, இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் செல்லவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதை அடுத்து இருவரும் சொந்த ஊர் செல்ல முடியாமல், சென்னை விமான நிலையத்தில் வெளிப்பகுதியில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி விமானத்தில் பயணம் செய்ய இண்டிகோ ஏர்லைன்ஸ் கவுன்டர் சென்றபோது, நேற்றும் விமானம் ரத்து என்று அறிவித்தனர். இதை அடுத்து செய்வதரியாது அத்தம்பதியினர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தவித்து வந்தனர்.
கரம் கொடுத்த தமிழக அரசு: இது குறித்துச் செய்திகள் வெளியான நிலையில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனடியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு அந்த வங்கதேச தம்பதிகளுக்கு உரிய தங்கும் வசதி, உணவு, மருத்துவ சிகிச்சை அளிக்கும் படி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து நேற்று மாலை வங்கதேச தம்பதியினர் சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் பல்லாவரம் பகுதியில் தங்கும் விடுதி ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதோடு அவர்களுக்கு உணவு ஏற்பாடுகளும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுசில் ரஞ்சன் மனைவிக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து வங்கதேசம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது என்ற தகவல் வந்ததை அடுத்து வங்கதேச தம்பதியினர் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி, இன்று பகல் 2 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் வங்கதேச தம்பதியினர் டாக்கா புறப்பட்டு செல்கின்றனர்.
மீண்டும் தொடங்கிய விமான சேவை: இதற்கிடைய வங்கதேசத்திற்கு சென்னையில் இருந்து கடந்த இரண்டு தினங்களாக ரத்து செய்யப்பட்டு இருந்த விமான சேவைகள் இன்று மீண்டும் தொடங்குவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் அறிவித்தனர்.
இன்று பிற்பகல் 1.50 மணிக்கு சென்னையில் இருந்து டாக்கா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பகல் 2 மணிக்கு சென்னையில் இருந்து டாக்கா செல்லும் பி எஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2:40 மணிக்கு, சென்னையில் இருந்து டாக்கா செல்லும் பீமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய மூன்று விமானங்கள் இன்று இயக்கப்படுகின்றன.