சென்னை: நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், தமிழ்நாடு ஆளுநரின் கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி, தமிழக சட்டப்பேரவைக்கு ஆளுநர் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்தார். ஆளுநருக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது தமிழக சட்டப்பேரவையில் தனது உரையை வாசிக்கத் தொடங்கிய ஆளுநர், அனைவருக்கும் வணக்கம் எனத் தமிழில் பேசத் தொடங்கி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். உரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை எனக் கூறி தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் "வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய்பாரத்” எனக் குறிப்பிட்டு 2 நிமிடங்களில் உரையை முடித்து இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
இதையடுத்து, தமிழக ஆளுநருக்கு அரசு தயாரித்து கொடுத்த உரையை, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தமிழில் வாசித்து வருகிறார். கடந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்ட பகுதிகளை வாசிக்காமல் நிராகரித்திருந்த நிலையில் நடப்பாண்டு முழு உரையையும் புறக்கணித்துள்ளார்.
கடந்த மாதம் கேரள சட்டப்பேரவை கூட்டத்திலும் அம்மாநில ஆளுநர் முகமது ஆரிஃப் கான், மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.