சென்னை: நாடு முழுவதும் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. அந்த வகையில், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் அதே தொகுதியில் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில், மதுரையில் இருந்து சென்னை வந்த கார்த்தி சிதம்பரத்திற்கு, சென்னை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் கூறுகையில், “இந்தியா (I.N.D.I.A) கூட்டணி சித்தாந்தம் மாநில உரிமைகளை மதிக்கின்ற மதச்சார்பற்ற கூட்டணிக்கு கிடைத்த வாக்காகத்தான் இந்த வெற்றி பார்க்கப்படுகிறது.
அண்ணாமலைக்கு என்னுடைய தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்களை (belated birthday wishes) தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று அவருக்கு பிறந்தநாள் என கேள்விப்பட்டேன். ஒரு நல்ல பிறந்தநாள் பரிசு அவருக்கு வரவில்லை. ஒரு ரியாலிட்டி செக் அவருக்கு பரிசாக வந்துள்ளது.
தமிழ்நாட்டின் கள நிலவரத்தை அவர் நேற்று புரிந்திருப்பார். தமிழ்நாடு இந்து, இந்தி அரசியலை விரும்புவது கிடையாது. எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அரசாங்கத்தை தான் விரும்புகிறது. அடக்கமாக இருக்கும் அரசியலைத்தான் விரும்புகிறது என நேற்று அவர் அறிந்திருப்பார்” என்றார்.
பின்னர், சந்திரபாபு பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தவர், “இது என்னுடைய ஸ்தானத்தை தாண்டிய கேள்வி. இதுக்கெல்லாம் என்னால் பதில் கூற முடியாது. எங்களுடைய கூட்டணி சிறப்பாக இருக்கிறது. எங்களுடைய கட்சி கூட்டணிக்கு புதிதான கட்சிகள் வருகின்றதா எனச் சொல்லும் நிலைமையில் நான் இல்லை” என்றார்.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் பற்றிய கேள்விக்கு, “அவருக்கு ஒரு சிறுபான்மையான அரசை நடத்திய அனுபவம் அவருக்கு கிடையாது. அதனால் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய மனப்பான்மை அவரிடம் இல்லை. பெரும்பான்மையான உறுப்பினர்களை வைத்திருந்த அரசை நடத்திதான் அவருக்கு வழக்கம். சரியாக அவர் நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை. கேள்விகளுக்கு பதில் சொல்லும் வழக்கம் கிடையாது. அயோத்தியில் வெற்றி அடையாதது அந்த ராமபரமாத்மா கொடுத்த வரமாக நான் பார்க்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: "அண்ணாமலை தோல்வி கொண்டாட்டம்.." மட்டன் பிரியாணி விருந்து வைத்த தபெதிக! - TPDK