சேலம்: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்திய பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று (மார்ச் 20) புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் அடுத்த கெஜல்நாய்க்கன்பட்டியில், நேற்று (மார்ச் 19) நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்தார். மேலும், இரண்டு இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டன.
இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில செய்தித் தொடர்பாளர் டாக்டர்.செந்தில் பேசுகையில், “பிரதமர் இந்திரா காந்தி 1975ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியபோது, இந்திய தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படி, எந்தவொரு தலைவரும், பிரதமர் அல்லது முதல்வர் கூட, பிரச்சார நோக்கங்களுக்காக அரசாங்க இயந்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது. தற்போது 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, சேலம் மாநகராட்சியால் மேயர் மற்றும் துணை மேயரின் அதிகாரப்பூர்வ வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டன. அதே விதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் பொருந்தும்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்த நிலையில், அவர் தங்களது கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது ஏன் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தினார்? பாஜக அந்த ஹெலிகாப்டர்களுக்கு வாடகை செலுத்தியதா என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். அப்படியானால், மற்ற கட்சித் தலைவர்களுக்கும் இந்த வசதி நீட்டிக்கப்படலாம். இந்திய விமானப்படைக்கும் இதன் மூலம் வாடகை வருவாய் கிடைக்கும்” என்று அவர் தெரிவித்தார்.