திண்டுக்கல்: தற்போது தமிழகம் முழுவதும் நிலவும் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் 22 மாவட்டங்களில் ஏற்பட்டு வரும் வறட்சியையும், இதனால் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையையும் சமாளிக்க ஆய்வுக் கூட்டம் நடத்தி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில், ஓய்வுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது குடும்பத்துடன் 5 நாள்கள் பயணமாகக் கொடைக்கானலுக்கு நேற்றைய முன்தினம் (ஏப்.29) புறப்பட்டுச் சென்றுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொடைக்கானல் சென்றார்.
கொடைக்கானல் பாம்பர் புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார். இந்த நிலையில், மே மாதம் 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் தங்கி குடும்பத்தோடு ஓய்வெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவ்வப்போது, கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்தோடு முதலமைச்சர் செல்லலாம் எனவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக மே 4ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் வருகையால், அங்கு 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஏப்.29) முழுவதும் ஓய்வில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஏப்.30) மாலை கொடைக்கானல் பசுமை பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் நடைப் பயிற்சி மேற்கொண்டும் கோல்ஃப் விளையாடியும் மகிழ்ந்தார்.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்த போதிலும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு தமிழ்நாடு முதலமைச்சர் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்தார். மேலும் கோல்ஃப் மைதானத்திற்கு வெளியே பேட்டரி கார் மூலம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திடீரென்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை சந்திக்க வேண்டும் என்று கூறி அவர்கள் காத்திருந்த இடத்திற்கு வந்து அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், கொடைக்கானலில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்றும் கேட்டு விசாரித்துச் சென்றார்.
இதையும் படிங்க: ஏற்காடு பேருந்து விபத்து: 6 பேர் பலி..வாகன ஓட்டிகளுக்கு கலெக்டர் விடுத்த எச்சரிக்கை!