சென்னை: சென்னை டி.டி.தமிழ் அலுவலகத்தில் பொதுத் தேர்தல் 2024 கையேடு வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு கலந்துகொண்டு, பொதுத் தேர்தல் 2024 கையேடு நூலினை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், "தேர்தலின்போது ஊடகங்கள் மிகப்பெரிய பங்காற்றுகின்றன. வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கும் மிகவும் முக்கியமானது.
அதன் எதிரொலியாக, 2021 தேர்தலின் போது பதிவான தபால் வாக்கை விட அதிக தபால் வாக்குகள் இந்த தேர்தலில் பதிவாகி உள்ளது. அதேபோல், 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க உதவும் 12டி விண்ணப்பம் 4 லட்சம் மேல் பதிவாகி உள்ளது. வாகனங்கள் சோதனை எந்தவித பாரபட்சமும் இன்றி மேற்கொள்ளப்படுகிறது.
தேர்தலில் பணபலத்தை எதிர்கொள்ள தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறோம். வாகன சோதனையில் ஈடுபடக்கூடிய வாகனங்கள் எங்கு இருக்கிறது என ஜிபிஎஸ் கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பேச்சைப் பரப்புரையின் போது பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்ட தேர்தல் பணி அதிகாரிகளுக்கு பயிற்சி மற்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து கட்சி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என அனைவரது வாகனங்களும் சோதிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பரப்புரையை விருப்பம் உள்ளோர் மட்டுமே பார்க்கின்றனர். யாரேனும் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பரப்புரை தொடர்பாகப் புகார் அளித்தல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், சமூக ஊடகங்களில் உள்ள நேரலை வசதியைப் பயன்படுத்தி இரவு 10 மணிக்கு பிறகும், பரப்புரை முடிந்த அமைதி நாளிலும் பரப்புரை மேற்கொள்வதைக் கண்காணிக்கிறோம். ஆனால், அதனைக் கட்டுப்படுத்துவதற்குத் தேர்தல் ஆணையத்திற்கு சில தடைகள் உள்ளன" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இதுவரை ரூ.69.70 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு!