சென்னை: சென்னை விமான நிலையத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "என்னைப் பொறுத்தவரையில், எல்லா நாளும் பெண்கள் நாளாகத்தான் பார்க்கிறேன். 365 நாளும் பெண்களுக்கான நாள்தான். மகளிர் தின வாழ்த்துக்களை தனியாக தெரிவிக்க வேண்டும் என்று இல்லை.
ஒரு காலத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று பேசியது எல்லாம் மாறி, பெண்கள்தான் இந்தியாவை இன்று முன்னின்று வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு நமது நாடு மாறியுள்ளது. நமது சகோதரிகள் மேன்மேலும் வளர வேண்டும். அதற்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை பெறுவதற்காக போராட்டங்கள் நடைபெற்றது. அது மகளிர் தினமாக கொண்டாடப்பட்டது. அப்படியே இங்கும் அது கடைபிடிக்கப்படுகிறது. பிரதமரை பொறுத்தவரையில், மோடி சிலிண்டர் மூலமாக இணைப்பு பெற்றவர்களுக்கு 300 ரூபாய் மானியமாக இருந்தது, 400 ரூபாயாக மாறி உள்ளது. மற்றவர்களுக்கு 200 ரூபாய் மானியமாக இருந்தது 300 ரூபாயாக மாறி உள்ளது.
ஆனால், தமிழகத்தில் திமுக தேர்தல் வாக்குறுதியில் சிலிண்டர் விலை குறைப்போம் எனக் கூறி வந்தார்கள், ஆனால் இதுவரையில் எதுவும் குறைக்கவில்லை. ஆனால், பிரதமர் தொடர்ந்து நமது தாய்மார்களுக்கு சிலிண்டர் விலையைக் குறைத்துள்ளார் என்றுதான் கூற வேண்டும்” என்றார்.
தமிழகத்தில் மோடி வாடகை வீடு எடுத்து தங்கினாலும், தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என கூறியது குறித்து கேட்டபோது, “கனிமொழி அவருடைய அப்பாவின் வீட்டில் உள்ளார். சொந்தமாக சம்பாதித்து, காடு மேடு சென்று விவசாயம் பார்த்து சம்பாதித்தாரா? கருணாநிதியின் மகள் என்பதை வைத்து ஓசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படி ஓசியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கனிமொழிக்கு, பிரதமரைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. அவர்கள் சொந்தமாக என்ன உழைத்துக் கொண்டிருக்கிறார்களா? நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் உழைக்கிறீர்கள். கனிமொழி என்ன உழைக்கிறார்கள்?
அப்பாவின் பெயரை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி என்ற பெயரை எடுத்து விட்டால் கனிமொழி யார்? அவர்கள் பிரதமரைப் பார்த்து, சென்னையில் வாடகை வீடு எடுத்து தங்க வேண்டும் என சொல்வதற்கு முன்பு, ஒரு முறை கண்ணாடியில் முகத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். எத்தனை வழக்குகள் உள்ளது? எத்தனை முறை சிறை சென்றுள்ளார்கள் என்பதையும் ஒரு முறை யோசிக்க வேண்டும். கனிமொழி இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும். பிரதமரைப் பற்றி பேசுவதற்கான அரை சதவீதம் தகுதி கூட இல்லை.
டிஜிபியை பலிகடா ஆக்குவதற்கு திமுக முயற்சிக்கிறது. திமுகதான் இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். ஜாபர் சாதிக் திமுகவின் அயலக அணியில் இருந்து கொண்டு, வெளிநாட்டில் தொடர்புகளை ஏற்படுத்தி, அதன் மூலமாக போதைப்பொருளை விற்பனை செய்துள்ளார்.
இதற்கு திமுக பதிலளிக்க வேண்டும், இதற்கு டிஜிபி ஏன் பேச வேண்டும்? விலை குறைவுதான், அவ்வளவு விலையில்லை என்றெல்லாம் பேசுகிறார். இது தேவையற்றது. சைலேந்திர பாபுவை இப்படித்தான் கோயம்புத்தூரில் சிலிண்டர் வெடித்ததாக பேச வைத்தார்கள். இது குறித்து திமுக நபர்கள்தான் பேச வேண்டும்.
உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை பதிவு செய்து, ஏன் அதை நீக்கினார்? திமுகவின் அங்கத்தில் இருப்பவர்கள் நடந்த தவறு என்ன என்பதை திமுகதான் கூற வேண்டும். டிஜிபி புகைப்படம் கொடுத்தார் என எங்கும் குற்றம் சுமத்தப்படவில்லை. அவர்கள் போட்டோ எடுக்கும் நபர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து போட்டோ எடுக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. இதற்கு டிஜிபி விளக்கம் கொடுப்பதை விட, திமுகதான் மக்கள் மன்றத்தில் பேச வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: "காலில் விழும் அரசியலே எனக்கு பிடிக்காது" - தமிழ்நாட்டுப் பெண்ணிடம் மோடி கூறியது என்ன?