கன்னியாகுமரி: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த ஓராண்டுக்கு மேலாக கேரள மாநிலத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகனும், மகளும் சென்னையில் வேலை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த தம்பதி தங்களது இரண்டு குழந்தைகளுடன் திருவனந்தபுரத்தில் தங்கி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, 13 வயது சிறுமி தாய் திட்டியதால் வேதனை அடைந்த வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்த நிலையில் மாலையில் வேலைக்கு சென்ற சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். வீட்டில் சிறுமி இல்லாதது குறித்து மற்றொரு மகளிடம் கேட்டு உள்ளனர். அப்போது அவள் வீட்டை விட்டுச் சென்று விட்டதாகக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடி உள்ளனர்.
ஆனால் கிடைக்கவில்லை உடனே சிறுமி மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமி எங்கு சென்றால் என்று விசாரணையைத் தொடங்கினர். மாயமானது குறித்து செய்தியும் வெளியானது.
இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காணாமல் போன சிறுமி திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் ரயிலில் ஏறி உள்ளார். இதனை ரயிலில் பயணித்த பயணி ஒருவர் பார்த்து உள்ளார். மேலும் தனது செல்போனில் எடுத்த சிறுமியின் புகைப்படத்தை போலீசாரிடம் காண்பித்து உள்ளார். அது காணாமல் போன 13 வயது சிறுமி தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
கன்னியாகுமரியில் தீவிர தேடல்: கேரள சிறுமி கன்னியாகுமரிக்கு வந்தது குறித்து கேரளா போலீசார், கன்னியாகுமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தது மட்டும் அல்லாமல் சிறுமியின் புகைப்படத்தை அனுப்பியுள்ளனர். அதனை வைத்து கன்னியாகுமரி போலீசார் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினர்.
அப்போது ரயில் நிலையத்தில் நின்ற ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர், சிறுமியைப் பார்த்ததாக ஆனால் அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை எனவும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தில் இருந்து சிறுமி வெளியே நடந்து சென்ற காட்சிகள் அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது.
இதனையடுத்து கன்னியாகுமரி போலீசார் மற்றும் கேரளா போலீசார் ஆகியோர் இணைந்து சிறுமியை தேடும் பணியில் இறங்கியுள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தளங்கள் மட்டுமின்றி தங்கும் விடுதிகள் பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் சிறுமியைத் தேடி வருகின்றனர்.
மேலும் சிறுமியின் சகோதரர் மற்றும் சகோதரி சென்னையில் வேலை செய்து வருவதால் அங்கு சென்று இருப்பாரோ என்ற எண்ணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சிசிலியன் நகரா சென்னை மெரினா? சென்னை தினத்தில் Marina Beach பற்றி அறியாத முக்கிய தகவல்கள்!