சென்னை: அரசுத் தேர்வுத்துறையால் நடத்தப்பட்ட 10, 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “10, 11 மற்றும் 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
இதன்படி, 12ஆம் வகுப்பு மாணவர்களின் துணைத் தேர்வு முடிவுகள் ஜூலை 26 ஆம் தேதி மதியம் 2 மணிக்கும், 10ஆம் வகுப்பு மாணவர்களின் துணைத் தேர்வு முடிவுகள் ஜூலை 30ஆம் தேதி மதியம் 2 மணிக்கும், 11ஆம் வகுப்பு மாணவர்களின் துணைத் தேர்வு முடிவுகள் ஜூலை 31 ஆம் தேதி மதியம் 2 மணிக்கும் வெளியிப்படும்.
இந்நிலையில், தேர்வர்கள் தங்களது தேர்வு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து மதிப்பெண் விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். துணைத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் உதவி மையத்தில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுத்துறை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளவர்கள் முதன்மைக்கல்வி அலுவலகத்திலும் நேரில் சென்று உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
மேலும், இந்த விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் ஜூலை 29, 30 ஆகிய தேதிகளிலும், 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளிலும் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இதில் விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்கள் மட்டுமே பின்னர், மறுக்கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பின்னர் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பொறியியல் சேர்க்கை; அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் 618 இடங்கள் காலி!