தஞ்சாவூர்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனின் உதவியாளர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்க இன்று (ஜூன்.15) கும்பகோணம் வருகை தந்த ஜி.கே.வாசன். முன்னதாக, முற்பகல் தனியார் சொகுசு விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,"பாஜக கூட்டணிக்கு எதிராக 23 கட்சிகள் கூட்டணி அமைந்து பெற முடியாத இடங்களை 240க்கும் மேற்பட்ட இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றி, தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பிரதமருக்கு அடுத்து தற்போது பிரதமர் மோடி அந்த சாதனையை நிகழ்த்தி வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இது இந்திய மக்கள் மோடி மீதான நம்பிக்கையை காட்டுகிறது.
திமுக தலைமையிலான தமிழக அரசு, தனது தேர்தல் வாக்குறுதிப்படி, கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டத்தை நடப்பு கூட்டத்தொடரிலேயே அறிவித்திட வேண்டும் என தமாகா வலியுறுத்துகிறது. மே, ஜூன் மாதத்திலே பெய்த கனமழை காரணமாக, விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளானார்கள். நெற்பயிர், பருத்தி போன்ற பயிர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் அரசு நிவாரணம் கொடுக்கவில்லை. உரிய கணக்கெடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும்.
உலகத்தில் பல நேரங்களிலே 100% வெற்றி பெற்ற கட்சிகள் எல்லாம் ஓர் இலக்கை பெறுவதும் உண்டு. தேர்தல் என்பது ஒரு ஜனநாயகப் பணி. இதில் மக்கள் தான் எஜமானர்கள். தேர்தலில் வெற்றி - தோல்வி என்பது ஜனநாயகத்தில் சகஜம் என்றாலும் கூட வெற்றி பெறுவது தான் எல்லா கட்சிகளுடைய இலக்கு என்பதில் மாற்று கருத்து கிடையாது.
தேர்தலுக்கு தேர்தல் எல்லா கட்சிகளுக்கும் ஒரு பாடம். பாடத்தின் அடிப்படையிலேயே மக்களின் நம்பிக்கையை மேலும் பெற்று வெற்றி பெறுவதற்கான நல்ல சூழலை ஏற்படுத்திக் கொள்வது தான் அனைத்து கட்சிகளின் கடமை. அதனை தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமையாக செய்யும்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக கூறுவது மட்டுமில்லாமல், அகில இந்திய அளவிலே கூட்டணி கட்சிகளை தூண்டி விடுவது என்பது தரமான கல்விக்கு திமுக ஆபத்தை ஏற்படுத்துகிறது. தேர்வுகள் கல்வித்துறை என்றால் முறைகேடுகள் நடக்கக் கூடாது.
அவ்வாறு நடந்தால் முறையாக சரியாக தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அந்த தவறு இனிமேல் கல்வித்துறையில் நடக்கவே கூடாது. அது மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக தவறுகள் நடக்க கூடாது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக இருக்கிறது. ஒரு புறம் டாஸ்மாக், மறுபுறம் போதைப்பொருள்கள். போதைப்பொருள்களை கட்டுப்படுத்த முடியாத அரசாக, இந்த அரசு செயல்படுவது வருத்தமளிக்கிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அடுத்த வாரம் 22ம் தேதியன்று சென்னையில் நடைபெறுகிறது. இதில் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள். கூட்டத்தின் நோக்கம், மக்கள் பணியையும், இயக்கப்பணியையும் தொடர்ந்து செயல்படுத்தி இயக்கத்திற்கு வலு சேர்க்கக் கூடிய ஆலோசனைகள் வழங்கப்படும். விக்ரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணி வெற்றிக்கு, தமாகா அயராது பாடுபடும்" என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போதைப்பொருளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழக முதலமைச்சர் முன்வருவாரா? - ஆர்.பி. உதயகுமார் கேள்வி! - drug issue in tamil nadu