சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாக ஏப்.6ஆம் தேதி தேர்தல் பறக்கும் படையினரால் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் 3 பேர் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில், நயினார் நாகேந்திரனுக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியானது.
அதையடுத்து இவ்வழக்கு விசாரணை தொடர்பாக நேற்று முன்தினம் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால், 10 நாட்கள் அவகாசம் கேட்டு அவரது வழக்கறிஞர் மூலமாக தாம்பரம் காவல் நிலையத்தில் கடிதம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரின் உறவினரான முருகன் உட்பட அவர் நிறுவனத்தில் பணிபுரியும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோரையும் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதற்காக ஜெய்சங்கர், ஆசைத்தம்பி இருவரும் நேற்று தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் உதவி ஆணையர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
வாக்குமூலத்தால் சிக்கிய நயினார்: அப்போது, முருகனிடம் 50க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி இருவரையும் தான் தான் அனுப்பி வைத்ததாகவும், ஆனால் அவர்கள் கொண்டு சென்ற பணத்தைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும், முருகன் எழுத்துப்பூர்வமாகத் தனது வாக்குமூலத்தை அளித்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பாஜக நிர்வாகி கோவர்தனுக்கு அனுப்பப்பட்ட சம்மன் தொடர்பாக அவரது மகன் கிஷோர் தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி தங்களுக்கும், தங்கள் ரெஸ்டாரண்டில் கைமாற்றப் பணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் சம்மன் அனுப்பிய தாம்பரம் போலீசார்: தற்போது இதுகுறித்து தாம்பரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், பாஜக சட்டமன்ற உறுப்பினரும் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு 2வது சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு வந்தனர். இந்நிலையில் மே மாதம் 2ஆம் தேதி நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன் இருவரும் தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த சம்மனைத் தாம்பரம் காவல்துறை அதிகாரி ஒருவர் நேரடியாக நயினார் நாகேந்திரனிடம் கொடுப்பதற்கு திருநெல்வேலி கொண்டு சென்றுள்ளதாகவும், மே மாதம் 2ஆம் தேதி நிச்சயம் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் நேரில் விசாரணைக்கு ஆதரவாக வேண்டும் என்பதை போலீசார் உறுதியாகத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.