சென்னை: நடப்பாண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (ஜூன் 25) நடைபெற்றது. இதில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறுபான்மையினர் நலத்துறை சார்ந்த 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி,
1. சிறுபான்மையின மகளிருக்கு 2,500 மின் மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரங்கள் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் வழங்குதல்.
2. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 1,200 ரூபாயாக உயர்த்தியும் மற்றும் மூக்கு கண்ணாடி உதவித்தொகை 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்தியும் வழங்குதல்.
3. கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையினை உயர்த்தியும் மற்றும் உறுப்பினர்களின் குடும்பத்தைச் சார்ந்த 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகையும் வழங்குதல்.
4. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் மற்றும் தேவாலயங்களில் கிறித்துவ பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியங்களின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை இணைய வழியில் செயல்படுத்திட தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் தனி மென்பொருள் (Software) மற்றும் வலைதளம் (Web Portal), 25 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்குதல்.
5. கடலூர் மாவட்டத்தில் செயல்படும் சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவியர் விடுதிக்கு 3 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் சொந்த கட்டடம் கட்டுதல்.
6. புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 மாணவர்கள் பயன் பெறும் வகையில் ஒரு புதிய சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவர் விடுதி 56 லட்சம் ரூபாய் செலவில் துவங்குதல்.
7. திருப்பூர், திருவள்ளூர், வேலூர், திண்டுக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, மதுரை மற்றும் ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் திருவள்ளூர் மற்றும் சிவகங்கை ஆகிய 2 மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் 10 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக துவங்குதல்.
8. மக்கள் அதிகம் வரும் தொன்மையான 6 தர்காக்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த 5 கோடி ரூபாய் வழங்குதல்.
9. வக்ஃப் சொத்துகளை அளவை செய்வதற்கான 1 கோடி ரூபாய் வழங்குதல்.
10. முதல் முறையாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த ஹஜ் புனித பயணிகள் ஒவ்வொருவருக்கும் 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குதல்.
இதையும் படிங்க: விடியல் பயணம் திட்டம்; 490 கோடிக்கு மேல் பயண நடைகளை மேற்கொண்டுள்ளதாக அரசு பெருமிதம்!