தமிழ்நாடு: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் இரண்டு மாத காலம் விடுமுறையைக் கொண்டாடித் தீர்த்த மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குத் திரும்பினர். இந்த கல்வியாண்டின் துவக்கம் சிறப்பாக அமைய தமிழக பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகளுக்கு பல்வேறு வழிமுறை வகுத்துள்ளது. மேலும், கல்வித்துறை மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுறுத்தலின்படி, அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வழியாக பணியாசியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளிக்குத் திரும்பும் மாணவர்களை வரவேற்கும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்ய பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது. அதில் பள்ளிகளைச் சுத்தம் செய்தல், முட்புதர்கள் அகற்றுதல், பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்தல் என ஏராளமான அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களாக பள்ளிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வந்தது. முதல் நாள் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அந்தந்த வகுப்புகளுக்குத் தேவையான புத்தகங்களை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
மாணவர்கள் விடுமுறையிலிருந்த நிலையில் வெறிச்சோடி இருந்த பள்ளிகளின் வளாகங்கள், பள்ளி திறப்பால் சுறுசுறுப்பு பெற்றுள்ளது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் 1,822 பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், இன்று காலையில் உற்சாகமாக மாணவ மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்குத் திரும்பும் மாணவ மாணவிகளைப் பெற்றோர் தங்களது வாகனங்களில் அழைத்து வந்து பள்ளியில் விட்டுச் சென்றனர்.
மாணவர்களை வரவேற்கும் விதமாக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பாரதியார் நடுநிலைப் பள்ளியின் தாளாளர் குணா மற்றும் தலைமையாசிரியர் ஜெய்சங்கர் தலைமையில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூ மற்றும் இனிப்புகள் கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
இதேபோல மயிலாடுதுறையில் உள்ள டி.பி.டி.ஆர் தேசிய துவக்கப் பள்ளியில் புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவ மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து, ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைத்து, மலர் தூவி, மலர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களை வகுப்பறைகளுக்கு அழைத்துச் சென்று ஆசிரியர் மடியில் அமர வைத்து நெல்லில் அகரம் எழுதச் செய்து கல்வியைத் தொடங்கி வைத்தனர்.
இதையும் படிங்க: பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக பத்து வேலை நாட்கள்.. முழு விவரம் இதோ!