ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புஞ்சைத்துறையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட டி.என்.பாளையம் வன எல்லையில் ஆதிபெருமாள் கோயில் கரடு என்ற இடத்தில், பெருந்துறை பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரது மனைவி ஈஸ்வரி பெயரில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிக்கான உரிமம் கடந்த 2015ஆம் ஆண்டே முடிவுற்ற நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக சட்டவிரோதமாக இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கல்குவாரியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சட்டவிரோதமாக வெடி வைத்து பாறையை உடைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு வேலை செய்த இரு தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்ததை அறிந்த மற்ற தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பியோடியதாகத் தெரிகிறது.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பங்களாபுதூர் போலீசார், வெடி விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் கோபி அருகே உள்ள அயலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(50) என்பதும், மற்றொருவர் கர்நாடகா மாநிலம் கர்கேகண்டியைச் சேர்ந்த அஜீத்குமார் என்பதும் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இருவரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காகக் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்துக்குப் பின் தலைமறைவான குவாரி உரிமையாளரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், சட்டவிரோத கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது கோபிசெட்டிபாளையம், புஞ்சைதுறையம்பாளையம் கிராமத்திலுள்ள கல்குவாரியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், புஞ்சைதுறையம்பாளையம் கிராமத்திலுள்ள கல்குவாரியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/gZ4pU1Etel
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 21, 2024
இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு, கோபிசெட்டிபாளையம் புஞ்சைதுறையம்பாளையம் 'அ' கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த தனியார் கல்குவாரியில் நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த வெடிவிபத்தில், கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அயலூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(50), கர்நாடக மாநிலம் மாட்டவள்ளி பகுதியைச் சேர்ந்த அஜீத்(27) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: தூத்துக்குடி எம்பி கனிமொழியை முற்றுகையிட்ட தருவைகுளம் கிராம மக்கள்.. காரணம் என்ன?