சென்னை: சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவ ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கம் தேசிய அளவில் நடைபெற்ற நிலையில், இதற்கு ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தர் வெங்கடாசலம் தலைமை ஏற்று வழிநடத்தினார். இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியா, சிங்கப்பூர் உட்பட 8 நாடுகளில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், முதல்வர்கள் வந்தனர்.
இதில் பிரத்யேகமாக நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்து கற்ப்பிக்கப்படும், கருத்துகளை நோயாளிகள் இல்லாமல் ‘சிமுலேஷன் தொழில்நுட்பம்’ மூலம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அறுவை சிகிச்சை குறித்து மாணவர்களின் திறனை வளர்க்கும் புதிய பயிற்சியை அறிமுகம் செய்தனர். அதேபோல் ‘விசுவல் ரியாலிட்டி’ மூலம் சிகிச்சை பயிற்சி அளிப்பது, செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் மூலம் பயிற்சி அளிப்பது என பல்வேறு புதிய கற்றல் முறையை அறிமுகம் செய்தனர்.
கருத்தரங்கத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் பாலாஜி சிங் கூறுகையில், “இந்த கருத்தரங்கம் மருத்துவ ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் நோக்கத்தோடு அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு மருத்துவ ஆசிரியர் மருத்துவ மாணவர்களுக்கு எப்படி பயிற்சி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. இது போன்ற மருத்துவ ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடப்பது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.
மேலும், இவ்வாறான கருத்தரங்கம் நடத்துவதற்காக நாங்கள் 20 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். அதற்காக முதலில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆய்வு செய்து வந்தோம். தற்போது தேசிய மருத்துவ ஆணையம் எங்களுடன் இணைந்து உதவி ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இதில் மிக முக்கியமான தொழில்நுட்பமான ‘சிமுலேஷன்’ மூலம் மாணவர்கள் மனிதர்களை வைத்து பயற்சி செய்யாமல், தொழில்நுட்ப முறையில் பயிற்சியடையும் வகையான பாடங்கள் குறித்து கலந்துரையாடல் நடந்தப்பட்டது ” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி! -