நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன் 6 ஆம் தேதி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 10 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளையும் சிறை பிடித்தனர்.
பின்னர், அவர்களை விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று, இலங்கை மல்லாகம் நீதிமன்றத்தில் 10 மீனவர்களையும் ஆஜர்படுத்தினர். அப்போது, சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை ஜூலை 8ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 8ஆம் தேதி சிறை காவல் முடிவடைந்த பிறகு மீண்டும் ஆஜர்படுத்தியபோது, இரண்டாவது முறையாக 10 மீனவர்களின் சிறைக் காவலை ஜூலை 22ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. அதன் பின்னர் நீதிமன்ற காவல் நிறைவடைந்து ஆஜர்படுத்தப்பட்டபோது, ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை சிறைக் காவலை மூன்றாவது முறையாக இலங்கை நீதிமன்றம் நீட்டித்தது.
இந்த நிலையில், நான்காவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 10 நாகை மாவட்ட மீனவர்கள் மீதான நீதிமன்ற காவலை இம்மாதம் 26ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு இன்று பிறப்பித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'தங்கலான்' படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. தயாரிப்பாளருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!