தேனி: "மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யாதா..?" இது ஒரு மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனையின் தாயின் அழுகுரல். தேனி அடுத்த அரண்மனைபுதூரில் உள்ள முல்லை நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா(17). இவர் காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவருக்கு விளையாட்டின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால், தடகள விளையாட்டுப் போட்டியில் பயிற்சி பெற்று வந்தார். அதனைத் தொடர்ந்து மாநில அளவிலும், தேசிய அளவிலும் தடகளப் போட்டியில் பங்கேற்று பல்வேறு பரிசுகளையும் வென்றுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று, 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தார். அந்த வெற்றி பிரியங்கா உட்படத் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மாணவிகளுக்கு, பிரேசிலில் நடைபெறும் சர்வதேச அளவிலான காது கேளாதோர் தடகள போட்டியில் பங்கேற்பதற்காக வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் நிதி இல்லாததாகக் கூறி, பிரேசிலில் நடைபெறும் சர்வதேச அளவிலான காது கேளாதோர் போட்டிக்கு அழைத்துச் செல்ல முடியாது என அகில இந்தியக் காது கேளாதோர் விளையாட்டு ஆணையம் கைவிரித்தது விட்டதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பிரியங்காவின் தாயார் உஷா நம்மிடத்தில் கூறியது, "என் பிள்ளை காது கேளாது, பேச முடியாது மாற்றுத்திறனாளி. சிறுவயதிலிருந்தே விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் கொண்ட இவர் தடகளப் போட்டியில் பங்கேற்று பல் சாதனைகள் படைத்துள்ளார். இவருக்கு, சர்வதேச அளவிலான போட்டி ஒன்றில் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நிதியைக் காரணம் காட்டி, பங்கேற்க வைக்க முடியாது எனக் கூறிவிட்டனர்.
அதன் பின்னர், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து, பிரேசிலில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க முடியாத நிலையை எடுத்துக் கூறினோம். அதன் பின்னர், எவ்வளவு தொகை தேவைப் படுகிறது என்பதை விசாரித்து, ஒவ்வொரு மாணவிகளுக்கும் தலா 5 லட்சம் என, 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
பின்னர், பிரியங்கா உட்பட மற்ற 5 மாணவிகளுக்கு விசா பெறுவதற்காக, ஒப்புதல் கடிதம் உட்பட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தோம். அதனைப் பெற்றுக் கொண்ட அகில இந்தியக் காது கேளாதோர் விளையாட்டு ஆணையம், ஆவணங்களை முறையாகச் சமர்ப்பிக்காததால் விசா கிடைக்காமல் போனது.
பின்னர், 5 மாணவிகளுக்கும் சரியாக உணவளிக்காமல் அவர்கள் அனைவரையும் தனியாக விமான மூலம் டெல்லியிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர். வரும் போது, மாணவிகள் மிகுந்த சோர்வாகக் காணப்பட்டனர். பிரியங்காவிற்கு அன்று முதல் உடல் நிலை சரியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல வருடங்களாகக் கஷ்டப்பட்டு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று சாதனை படைப்பதற்காக எங்கள் பொருளாதார சக்திக்கு மீறிய உதவிகளை நாங்கள் செய்தோம். இந்த சர்வதேச விளையாட்டுப் போட்டி என் மகளின் வாழ்வை மாற்றுவதாக இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அது நிறைவேறாமல் போனது. மத்திய அரசு காது கேளாத மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்யாதா" எனக் கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விமானம் மூலம் மாலை சென்னை வரும் பவதாரிணி உடல்.. தி.நகரில் ஏற்பாடுகள் தீவிரம்!