தஞ்சாவூர்: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் கர்நாடகவில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது முழு கொள்ளளவை அடைந்தது.
ஆர்ப்பரிக்கும் நீர் வரத்து: இதனையடுத்து அணைக்கு வரக்கூடிய உபரி நீரை முழுமையாக வெளியேற்றி வருகின்றனர். இதன் காரணமாக நேற்று ஒரு லட்சத்து 55 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் கபினி மற்றும் கே ஆர் எஸ் அணைகளில் இருந்து தமிழகத்திற்குத் திறந்து விடப்பட்டது.
இதனால் ஒகேனக்கல் பகுதியில் உள்ள அருவிகள் தண்ணீரில் மூழ்கி வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல்லுக்கு செல்ல மற்றும் குளிக்க பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் 13வது நாளாக தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூலை 16ம் தேதி 43 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் 11 நாட்களில் கிடுகிடுவென உயர்ந்து 100 அடியைத் தாண்டி வேகமாக நிரம்பி வருகின்றது.
தற்போது அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1.23 லட்சம் கன அடியில் இருந்து 1.34 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்த இன்னும் சில தினங்களில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயற்கை வழிபாடு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதையொட்டி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்தநிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த மேலபுனவாசல் கிராமத்தில், இந்தியப் பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை சார்பில் இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தியும், காவிரி தண்ணீரை வரவேற்கும் வகையிலும் மாபெரும் இயற்கை வழிபாடு நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் ஆசிவகத் தமிழ்ச் சித்தர் கண்ணன் அடிகள் தலைமையில் கிராம மக்கள் மேள தாளங்கள், சிவகணங்கள் முழங்க ஊர்வலமாக வந்து சூரிய பூஜை, கோ பூஜை, மர பூஜை, அசுவமேதை பூஜை உள்ளிட்டவைகளை செய்தனர். பின்னர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி காவிரி நீரை மலர் தூவி வரவேற்று, கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் இந்தியப் பண்பாட்டு அமைப்பு நிர்வாகிகள், மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மரத்துக்கு கூட பிறந்த நாள் கொண்டாடுகின்ற அந்த மனசு இருக்கே... அதுதான் சார் மதுரைக்காரன்!