சேலம்: புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏற்காட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோடை வெப்பம் அதிகரித்து இருந்தது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவாகவே இருந்த நிலையில், தற்போது கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ன சூழல் நிலவுவதாலும், சாரல் மழை பெய்து வருவதாலும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், கொடைக்கானல் மற்றும் ஊட்டி ஆகிய சுற்றுலாத் தலங்களில் இ-பாஸ் நடைமுறை அமலில் இருப்பதாலும், வருகின்ற 22ஆம் தேதி வரை கனமழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும், நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது .
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வரத்து தற்போது ஏற்காட்டுக்கு அதிகரித்து உள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களுக்கு சேலம் போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில் கூடுதலாக 14 பேருந்துகள் இயக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
ஏற்கனவே, தினசரி 12 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக 14 பேருந்துகள் இயக்கப்படுவதாக சேலம் போக்குவரத்து கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஏற்காட்டுக்காகச் செல்ல ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனர்.
மேலும், வருகின்ற 22ஆம் தேதி முதல் கோடை விழா தொடங்க உள்ளதையடுத்து, சேலம் போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில் மேலும் கூடுதலாக 35 பேருந்துகள் இயக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க :நாகை - காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு - காரணம் என்ன? - Nagapattinam To Kankesanthurai Ship