கோயம்புத்தூர்: கோவை - பாலக்காடு இடையேயான சாலையில் உள்ள குனியமுத்தூர் மைல் கல் பகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லம் அமைந்துள்ளது. அப்பகுதியில் பல்வேறு இடங்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் புகைப்படத்துடன் தீவிரவாதி என்று அச்சிடப்பட்ட நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக தொண்டர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் நேற்று (ஜன.24) இரவு குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒன்று திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது ஏற்பட்டது.
அதன் பின்னர், இது குறித்து விசாரித்து நோட்டீஸ் ஒட்டிய நபர்களை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதியளித்தை அடுத்து, அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். மேலும், போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக இது குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், "நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், இருப்பினும் நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக அமோக வெற்றி பெறும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல் 2024: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரின் சுற்றுப்பயண விவரம் வெளியீடு!