வேலூர்: இந்தியாவில் திருத்தப்பட்ட 3 முக்கிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்த முதல் கட்ட பயிற்சி முகாம், மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஏடிஎஸ்பி பாஸ்கரன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் பாரதி தலைமையில் காட்பாடியில் தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர். இங்கு காலை மற்றும் மாலை என இரு கட்டங்களாக பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்நிலையில், இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட காட்பாடி காவல் நிலைய தலைமைக் காவலர் கோபி மது போதையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து, கூட்டத்தில் காவல் ஆய்வாளர் பாரதி, புதிய சட்டங்கள் தொடர்பான கேள்வியை எழுப்பியுள்ளார். அப்போது, தலைமை காவலர் கோபி, காவல் ஆய்வாளர் பாரதியிடம் அநாகரீகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அங்கிருந்த காவலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தலைமை காவலர் கோபிக்கு விளக்க நோட்டீஸ் வழங்க காவல் ஆய்வாளர் பாரதி முயன்றுள்ளார்
இந்நிலையில், அங்கிருந்து செல்ல முயன்ற தலைமை காவலர் கோபியை, காவல் அதிகாரிகள் காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டனிடம் ஒப்படைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவர் மதுபோதையில் இருந்ததற்கான சான்று பெறுவதற்காக, அவரை வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்த நிலையில், தலைமை காவலர் கோபி அடிக்கடி மருத்துவ விடுப்பில் செல்வதும், பணிக்கு மது போதையில் வருவதும் தெரிய வந்துள்ளது. மேலும், இவர் மீது ஏற்கனெவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. ஆயுதப்படை பெண் காவலர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
தற்போது, பயிற்சி வகுப்பில் மதுபோதையில் இருந்ததுடன், பெண் காவல் ஆய்வாளரிடம் அநாகரீகமாக பேசியுள்ளதால், குடிபோதையில் பயிற்சி வகுப்பில் அராஜகம் செய்த காட்பாடி தலைமை காவலர் கோபியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ராகுலை திடீரென புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜு; அரசியல் தீயைப் பற்ற வைத்த அதிமுக! - Sellur Raju Praises Rahul Gandhi