தருமபுரி: தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அதகபாடி, செக்காரபட்டி, சவுளுா், சின்னக்கம்பட்டி, குள்ளம்பட்டி, கானாபட்டி, ஒசஅள்ளி புதூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பேசிய அவர், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்தாலும், எப்போதும் உங்களுடன் இருப்பேன் எனவும், உங்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பேன் எனவும் தெரிவித்தார். மேலும், காவிரி உபரிநீர் திட்டம், சிப்காட் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற பாடுபடுவதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராமதாஸ் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு போராடி சாதித்ததைப் போல காவிரி உபரி நீர் திட்டத்தை பாமக கொண்டு வரும் எனத் தெரிவித்தார். எந்த ஒரு நல்ல திட்டம் தருமபுரிக்கு வந்தாலும் அதைக் கொண்டு வர பாடுபட்டது பாட்டாளி மக்கள் கட்சி எனவும், அதேபோல காவிரி உபரி நீர் திட்டத்தையும் கொண்டு வரப் போராடும் எனக் கூறினார். நாங்கள் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் போராட்டத்திலாவது திட்டத்தைக் கொண்டு வர மிகுந்த முயற்சி எடுப்போம் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மட்டுமின்றி, இடைத்தேர்தல் என்றாலே அது எப்படி நடக்கும் என்று அனைவருக்கும் தெரிந்தது தான் என்றும், இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் அருமையான வெற்றி என்று சொல்லலாம் எனத் தெரிவித்தார்.
மேலும், எந்த ஒரு அதிகார பலம், ஆள் பலம், பண பலம் இன்றி எந்த இடைத்தேர்தலிலும் இதுவரை வாங்காத வாக்குகளை இத்தேர்தலில் பெற்று இருக்கிறதாக தெரிவித்தார். மேலும் நீட் தேர்வு விலக்கு குறித்து பேசிய அவர், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற நிலைப்பாட்டில் பாமக என்றைக்கும் பின்வாங்காது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யும் திட்டமா? - தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை!