சென்னை: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் அருகே உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கரில் விவசாயப் பாசனம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கூறி, சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அமராவதி அணையின் நீர் ஆதரமாக சிலந்தி ஆறு உள்ளது. அமராவதி ஆற்றுப் படுகையில் 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டால், அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து முழுவதும் குறைந்துவிடும். இதனால் குடிநீர் மற்றும் விவசாய பாசனத் தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் போகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதன் காரணமாக, சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ஊடகங்களில் வெளி வந்த செய்திகளின் அடிப்படையில், சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை வழக்காக எடுத்து விசாரித்தனர்.
அப்போது, சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தேசிய வன விலங்குகள் வாரியத்திடம் கேரள அரசு உரிய அனுமதி பெற்றுள்ளதா? என தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. மேலும், உரிய அனுமதி பெறப்படவில்லை என்றால், உடனடியாக அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த அணை கட்டப்படுவதால் தமிழகத்திற்கு என்ன பாதிப்பு என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.