சென்னை: சென்னை கடற்கரை - வேலூர் கண்டோன்மெண்ட் இடையே தினசரி இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில் மே.2 ஆம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மெண்ட்டிற்கு தினசரி மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், இரவு 9:35 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட்டை சென்றடைகிறது. இந்த நிலையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் திருவண்ணாமலைக்கு ஏற்கனவே சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில், கூடுதலாக ஒரு ரயிலைத் தினமும் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து டெல்லி ரயில்வே போர்டு சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மெண்ட்டுக்கு இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில், மே 2ம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதில், “சென்னை கடற்கரையில் இருந்து மே 2ஆம் தேதி முதல் மாலை 6 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06033) புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை இரவு 9.35 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மடிமங்கலம், போளூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, நள்ளிரவு 12.05 மணிக்குத் திருவண்ணாமலையைச் சென்றடையும்.
மறு மார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து மே 3ஆம் தேதி முதல் அதிகாலை 4 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06034) புறப்பட்டு, வேலூர் கண்டோன்மெண்ட்டுக்கு அதிகாலை 5.40 மணிக்குச் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு, சென்னை கடற்கரைக்குக் காலை 9.50 மணிக்குச் சென்றடையும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் சேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவை தொகுதியில் மீண்டும் தேர்தலா? - உயர் நீதிமன்றம் நாளை விசாரணை! - Lok Sabha Election 2024