மதுரை: அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை மே மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலானது (06030), வரும் ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 07.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
அதேபோல், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலானது (06029) ஜூன் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு திங்கள்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 07.45 மணிக்கு புறப்படும், மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: அதேபோல், தற்போது மதுரை வழியாக இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் சேவை மே மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயிலானது (06012) , வரும் ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 04.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
அதேபோல், தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயிலானது(06011) ஜூன் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து காலை 08.05 மணிக்கு புறப்படும், இரவு 08.55 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவும் தற்போது நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்றவற்றுக்கான தடை நீட்டிப்பு! - Ban On Gutka