திருநெல்வேலி: நெல்லை ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டு 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அவர் எப்படி இறந்திருப்பார்? அது கொலையா? தற்கொலையா என்று பல கேள்விகள் எழுந்த வந்த நிலையில் இதுதொடர்பாக தென்மண்டல ஐஜி கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக தென்மண்டல ஐஜி கண்ணன் இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “ஜெயக்குமாரை காணவில்லை என்று மே 3ஆம் தேதி புகார் கொடுக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 9 மணிக்கு வழக்கு பதியப்பட்டது. புகார் மனுவோடு இரண்டு கடிதங்கள் வழங்கப்பட்டன.
மரண வாக்குமூலம் என கொடுத்த புகாரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெயர் குறிப்பிட்டு இருந்தது. ஆனால், அது காவல் கண்காணிப்பாளருக்கு கிடைக்கப்பெறவில்லை. இரண்டாவது கடிதம் உறவினருக்கு எழுதப்பட்டிருந்தது. இரண்டு கடிதங்களிலும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாகவும், அரசியல் விவகாரம் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டது.
அதன் அடிப்படையில் காணவில்லை என்ற வழக்கு சந்தேக மரண வழக்காக மாற்றப்பட்டது. கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 32 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும், அந்த 32 பேரிடம் மீண்டும் விசாரிக்க வாய்ப்பு உள்ளது. ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டபோது அவரது உடலில் 15 சென்டிமீட்டர் முதல் 50 சென்டிமீட்டர் அளவு கொண்ட கடப்பாக்கல் கம்பியுடன் கட்டப்பட்டிருந்தது.
அதேபோல, அவரது வாயில் பாத்திரம் கழுவும் ஸ்கிராப் இருந்தது. தற்போது வரை முதல்கட்ட உடற்கூராய்வு அறிக்கை மட்டும் வந்துள்ளது. தடய அறிவியல் அறிக்கை, டிஎன்ஏ அறிக்கை மற்றும் முழு உடல் கூராய்வு அறிக்கை உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகள் இன்னும் வர வேண்டியுள்ளது. அறிவியல் ரீதியான அறிக்கை வந்த பிறகு தான் முடிவு சொல்லப்படும். வழக்கில் பல கேள்விகளுக்கு தெளிவு கிடைக்க வேண்டியுள்ளது.
ஜெயக்குமாரின் மரணம் தற்கொலை எனவோ, கொலை எனவோ இன்னும் முடிவு செய்யவில்லை. விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும், சைபர் க்ரைம் போலீசார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் மூலமும் ஆய்வு நடந்து வருகிறது.
இந்த வழக்கு தற்போது வரை சந்தேகம் மரணமாக மட்டும் தான் பதிவாகி விசாரணையானது நடந்து வருவதாக தெரிவித்த ஐஜி கண்ணன், திருச்சி ராமஜெயம் வழக்கு தொடக்கத்திலேயே கொலை வழக்கு என பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கு அப்படி இல்லை என்று கூறினார்.
ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில் பணம் தொடர்பான பிரச்சனை, அரசியல் தொடர்பான பிரச்சனை என பல பிரச்சனைகள் உள்ளது. குடும்பத்தினர் உறவினர்கள் அரசியல் கட்சியினர் என அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. சபாநாயகர் பெயரும் கடிதத்தில் இடம் பெற்றுள்ளது. தேவைப்பட்டால் அவரிடமும் விசாரணை நடத்தப்படும் இந்த வழக்கு விசாரணை கூடிய விரைவில் முடிவு பெறும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அறிக்கை ரெடி... நெல்லை விரையும் ஐஜி... ஜெயக்குமார் வழக்கில் அடுத்தது என்ன?