சென்னை: பாஜகவின் தமிழக மாநிலத் தலைவராக செயல்பட்டு வருபவர் கே.அண்ணாமலை. இவர் கடந்த ஜூலை 2021ஆம் ஆண்டு பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றார். பாஜக விதிப்படி, கட்சித் தலைவராக ஒரு நபர் 3 வருடங்கள் வரை மட்டுமே பதவி வகிக்க முடியும். இப்பதவி மீண்டும் வேறுரொருவருக்கோ அல்லது அந்த நபருக்கே பதவியை வழங்கப்படலாம்.
இந்நிலையில், அண்ணாமலை மாநிலத் தலைவராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் முடிய உள்ள நிலையில், சமுக வலைத்தளத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், அண்ணாமலை மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வதால், தீவிர அரசியலிலிருந்து 6 மாதங்கள் ஓய்வெடுக்க உள்ளதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
முன்னதாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர் எனவும், அண்ணாமலை வரும் செப்டம்பர் மாதம் இதற்காக லண்டன் செல்ல உள்ளதாகவும், 6 மாதங்கள் அங்கேயே தங்க உள்ளார் எனவும் கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது தொடர்பாக அண்ணாமலை பாஜக மேலிடத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், தற்போது வரை பாஜக மேலிடத்திற்கு எழுதிய கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அடுத்த தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் யார் என்ற போட்டியும் அக்கட்சியினருக்குள் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்பதவிக்காக அக்கட்சியின் பல தலைவர்கள் மத்தியில் போட்டி நிலவுவதாக கூறப்படும் நிலையில், தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் புதிய தமிழ்நாடு பாஜக தலைவராகவோ இல்லையெனில், புதிய தலைவரை நியமிக்கும் வரை பொறுப்பு தலைவராகவோ கூட நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த சிறுவன் உள்ளிட்ட 6 பேர் கைது!