சென்னை: சுயநிதி தொழிற்கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழு ஓய்வு பெற்ற நீதியரசர் பொங்கியப்பன் தலைமையில் செயல்பட்டு வருகிறது. அந்தக்குழு மருத்துவம், பொறியியல், கல்வியியல், மருத்துவம் சார்ந்த படிப்புகள், சட்டம் மற்றும் தொழிற்கல்வி பயில்வதற்கான கட்டணத்தை உயர்த்துவதற்கான விண்ணப்பங்களைக் கேட்டது.
அதன் அடிப்படையில் தொழிற்கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் 11 ஆம் தேதிக்குள் தங்களின் கல்லூரியில் 2021-2022, 2022-2023, 2023-2024 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்ந்த விபரங்களின் அடிப்படையில் , அவர்களிடம் பெற்ற கல்விக் கட்டணம், வளர்ச்சி நிதி, நிர்வாக ஒதுக்கீட்டில் பெறப்பட்ட கட்டணம், விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட தொகை, மாணவர் சேர்க்கை கட்டணம், டிஜிட்டல் நூலகம் மற்றும் இண்டர்நெட் வசதி கட்டணம், பிற வகையில் பெறப்பட்ட கட்டணங்களின் விபரத்தைத் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
மாணவர்களின் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான கட்டணம், விடுதிக்கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட வகையில் பெற்ற அனைத்து வருமானத்தையும் காண்பிக்க வேண்டும். மாணவர்களின் விபரத்தைப் பாடப்பிரிவு மற்றும் வகுப்புவாரியாகவும் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தது.
ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பெயர், விபரம், துறை, கல்வித் தகுதி உள்ளிட்டவற்றுடன் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், மாதவாரியான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்தது.
மேற்கண்ட அனைத்தையும், மருத்துவம், பொறியியல், கல்வியியல், மருத்துவம் சார்ந்த படிப்புகள், சட்டம் மற்றும் தொழிற்கல்வி ஆகிய சுய நிதி கல்லூரிகள் கல்விக்கட்டண நிர்ணயக்குழுவிடம் அளித்துள்ளது.
அந்த வகையில், வரும் கல்வி ஆண்டு முதல் தொழிற்கல்வி படிப்பிற்கான கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் எனக் கட்டண நிர்ணயக் குழுவிடம் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.85 ஆயிரமும், அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களுக்கு ரூ.50 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. பொறியியல் கல்லூரிகள் வருகின்ற ஆண்டுகளில் கட்டணத்தை உயர்த்த கட்டண நிர்ணய குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவப் படிப்பில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம், நிர்வாக ஒதுக்கீட்டு இடத்திற்கு ரூ.13 லட்சத்து 50 ஆயிரம், என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடத்திற்கு ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிடிஎஸ் படிப்பிற்கு அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், நிர்வாக ஒதுக்கீட்டு இடத்திற்கு ரூ.6 லட்சம், என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடத்திற்கு ரூ. 9 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு 2023-24 ஆம் கல்வியாண்டில் வசூலிக்கப்பட்டுள்ளது. அதனை 25 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் எனத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2023-24ஆம் கல்வியாண்டில் பிஎட், எம்எட் படிப்பிற்கு ரூ.45 ஆயிரம் வரை கல்விக்கட்டணமாக வசூல் செய்து வருகின்றனர். எனவே 25 சதவீதம் கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் சட்டக்கல்லூரிகளில் ஆண்டிற்கு கட்டணமாக ரூ.85 ஆயிரம் வசூல் செய்யப்படுகிறது. அதனையும் 25 சதவீதம் உயர்த்துவதற்குக் கட்டண நிர்ணய குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! - Dhanush Aishwarya Divorce