சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை பொறுப்பேற்று, மூன்றாண்டுகளை நிறைவு செய்து நான்காம் ஆண்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், துணை முதலமைச்சர் பதவியை ஏற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறுப்பு தெரிவித்து வருவதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளலாம் என்ற மனநிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்ற பின் இதுவரை மூன்று முறை அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ள நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் முதல் முறையாக அப்போதைய பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது நான்காவது முறையாக நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தில், இரண்டு அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கதர் மற்றும் துணிநூல் துறை அமைச்சராக உள்ள காந்தி, கட்சி ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளதால், அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் துறை சார்ந்த குறிப்பிடத்தக்க எந்த ஒரு பணியையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், வனத்துறை அமைச்சராக உள்ள டாக்டர் மதிவேந்தன், சமீபத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களில் இரண்டு பேர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாகவும், மேலும் சில மூத்த அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இரண்டு அமைச்சர்களுக்கு பதிலாக பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து 2023ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட ஆவடி நாசர் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், கதர் மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்திக்கு பதிலாக வட மாவட்டத்தைச் சேர்ந்த யாருக்காவது அமைச்சர் பதவியை ஒதுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை மாற்றம் தொடர்பான தகவல்கள் வெளியானதிலிருந்து, அமைச்சரவையில் இடம் பிடிக்க ஒரு சில எம்எல்ஏக்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்