மதுரை: தேனி மாவட்டம் வருசநாட்டின் மலைப்பகுதியில் உற்பத்தியாகி, ராமநாதபுரம் சேதுச்சீமை வரை பல ஆயிரம் ஆண்டுகளாக ஓடி வரும் வைகை, சங்கத் தமிழ் இலக்கியங்களால் அதிகம் பாடப்பட்ட ஒரு நதியாகத் திகழ்கிறது. மதுரைக்கு அடையாளமாக திகழும் மீனாட்சி அம்மனின் கணவர் சிவபெருமானால் உருவாக்கப்பட்ட இந்த நதியை, வட மொழி நூல்கள் கிருதமாலா என்று குறிப்பிடுகின்றன.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் வைகையை 'வையை எனும் பொய்யாக் குலக்கொடி' என பாடி மகிழ்கிறார். வைகையின் இருபுறக் கரைகளிலும் ஓங்கி உயர்ந்த மரங்களிலிருந்து விழும் மலர்களால், போர்த்தப்பட்டு தண்ணீரே தெரியாத அளவிற்கு, மதுரைக்குள் வைகை செல்கிறது என்று அதே சிலப்பதிகாரம் வைகை நதியைப் போற்றுகிறது. ஆனால் இன்று..? அசுத்தத்தின் உச்சத்தில் வைகை பொலிவிழந்து கொண்டே போகிறது.
மதுரை மாநகரின் அனைத்துக் கழிவுகளையும் சுமந்து செல்லும் சாக்கடையாக மாறிக் கொண்டிருக்கிறது. மாசுபாடுகளில் சீரழிந்து வரும் இந்திய நதிகளுள் ஒன்றாக வைகையும் உள்ளது என மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் கூறியுள்ளது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் வாயிலாக கடந்த 2007ஆம் ஆண்டே, வைகையில் கழிவு நீரைத் தடுப்பதற்காக கழிவு நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள் உள்பட மொத்த திட்டச் செலவுகளுக்காக 165 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால் அதற்குப் பிறகு வைகைக் கரையோரம் அமைக்கப்பட்ட சாலைகள், ஆரப்பாளையம், கல்பாலம், ஆழ்வார்புரம் பகுதிகளில் அமைக்கப்பட்ட தடுப்பணைகள் ஆகியவற்றால் நிலத்தடி நீர் மேம்படும் என காரணம் சொல்லப்பட்டது. இருந்தபோதும்கூட முன்பைவிட தற்போது தான் வைகையின் சீரழிவு மிக வேகமாகக் காணப்படுகிறது.
இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், "வைகை ஆற்றின் இரண்டு புறமும் தற்போது கழிவு நீர் கலப்பதுதான் தூங்கா நகரத்தின் துயரமாக மாறியுள்ளது. இதனை தடுக்க வேண்டிய பொதுப்பணித்துறை, தொடர்ந்து வேடிக்கை பார்த்து வருகிறது. மதுரை நகருக்குள் 12 கி.மீ வரை செல்லும் வைகை ஆற்றைப் பராமரிக்க வேண்டியது மதுரை மாநகராட்சி தான். ஆனால் கழிவுநீர் கலப்பதற்கு மதுரை மாநகராட்சியே முக்கியக் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், ஆற்றில் கரையோரம் நடந்து செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரில் வளரும் ஆகாயத் தாமரைகளால் கொசுக்கள் உள்ளிட்ட பல்வேறு தீங்கு தரக்கூடிய உயிரிகள் பெருகி வருகின்றன. இதனால் நோய்த்தொற்று அபாயமும் அதிகமாக உள்ளது. ஆற்றுக்குள் 68 இடங்களில் மாநகராட்சி கழிவுநீரைத் திறந்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டை அடுத்து, தற்போது அதனை 36ஆகக் குறைத்தாலும், அக்குழாய்களில் செல்லும் கழிவுநீரின் அளவு அதிகரித்துள்ளது.
இதனால் நிலத்தடி நீரின் தரம் குறைந்துவிட்டது. அதேபோன்ற அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கழிவுகளும் வைகை ஆற்றுக்குள் விடப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தோம். தற்போதும் அதேபோன்ற நிலை தொடர்கிறது. மதுரையின் வடக்குப்பகுதியான சக்கிமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் 40 எம்.எல்.டி கொள்கலனும், தெற்கே அவனியாபுரம் வெள்ளக்கல்லில் 125 எம்.எல்.டி கொள்கலன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அளவிற்கு அங்கே கழிவுநீர் கொண்டு செல்லப்படுவதில்லை" வேதனையுடன் கூறினார்.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பழனிவேல் ராஜன் கூறுகையில், "இருகரைகளையும் தொட்டு ஓடக்கூடிய வைகை இன்றைக்கு குப்பைமேடாக காட்சியளிக்கிறது. மதுரை நகர்ப்புறத்தில் வாழக்கூடிய மக்கள், தங்கள் வீட்டுக் கழிவுகளை ஆற்றுக்குள் கொட்டுவது வேதனைக்குரியது.
மதுரை மாநகராட்சி நிர்வாகமும் இதனைக் கண்டு கொள்ளாமல், அவர்களும் சேர்ந்தே அசுத்தப்படுத்துகிறார்கள். நம் முன்னோர்களால் புனிதமாகப் போற்றப்பட்ட வைகை ஆற்றில் கல்பாலம் அருகே அமைக்கப்பட்ட தீர்த்தத்தொட்டியில் இருந்து தண்ணீர் வந்து எடுத்து, மீனாட்சி அம்மன் சிலை உள்ளிட்ட கோயிலில் உள்ள பல்வேறு சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தத் தொட்டி தற்போது குப்பைக்கூளங்களால் அசுத்தமாக உள்ளது.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான் தொடர்கிறது. இரண்டு புறமும் சாலை போடுவதாகக் கூறி அரசாங்கம் அவர்கள் பங்குக்கு ஆற்றைச் சுருக்கிவிட்டார்கள். தன்னுடைய கம்பீரத்தை இழந்து மிகவும் அவலமான நதியாக வைகை மாறிவிட்டது" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: காந்தி நினைவு அருங்காட்சியகத்தை அரசியல் களமாக மாற்றுவதா? - சமூக ஆர்வலர்கள் கொதிப்பு! - Madurai Gandhi Museum