திருச்சி: திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் 3 இளம் பெண்கள் நடனமாடி, அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இது மட்டுமின்றி, தெருக்களிலும் நடனமாடி பதிவேற்றம் செய்துள்ளனர்.
குறிப்பாக பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையம் போன்ற பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நடனம் மற்றும் நாடகம் போன்றவை நடத்தப்படும். அவ்வாறு நடத்தப்படும் நிகழ்ச்சிகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினரின் அனுமதி பெற்ற பின் நடத்தப்படுவது வழக்கம்.
அதேபோல், ஊடகத் துறையினர் மற்றும் பத்திரிகை துறையினரும் ரயில் நிலையங்களில் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்ய முறையாக ரயில்வே காவல்துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, அதன் பிறகு தான் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.
ஆனால், கட்டுப்பாடுகள் உள்ள ரயில் நிலையத்தில், யார் அனுமதியும் பெறாமல் மூன்று இளம் பெண்கள் சினிமா பாடலுக்கு சாதாரணமாக நடனம் ஆடி வீடியோ பதிவேற்றம் செய்திருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த கடும் கண்டனங்களையடுத்து, தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த அந்த வீடியோவை அவர்கள் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.