திருநெல்வேலி: திருநெல்வேலியில் சமூக ஆர்வலர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயங்களுடன் சமூக ஆர்வலர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், இச்சம்பவம் குறித்து ஹை கிரவுண்ட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் பெட்ரின் ராயன். சமூக ஆர்வலரான இவர், திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள அனுமதியில்லாத கட்டிடங்கள் குறித்தும், மருத்துவக் கழிவுகள் குறித்தும் பல்வேறு புகார்களை வெளியுலகிற்குக் கொண்டு வந்தவர்.
மேலும், கனிம வளக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளிலும் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தில் அவ்வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், வழக்கமாக காலையில் இறகுப்பந்து விளையாடும் மையத்திற்குச் செல்வதற்கு வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே உள்ள மையத்தில் காரை நிறுத்திவிட்டு, அங்கிருந்து நடந்து சென்றுள்ளார்.
அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர், அவரை வழி மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் நிலை குலைந்து கீழே விழுந்த ராயனை, அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: “எந்த ஒரு குடுத்தல் வாங்கலும் கிடையாது”.. நெல்லை ஜெயக்குமார் விவகாரத்தில் ரூபி மனோகரன் விளக்கம்! - MLA Ruby Manoharan