மதுரை: மதுரை மாவட்டம், கருப்பாயூரணி அருகே உள்ள கல்மேடு என்ற பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடிபாடுகள் அகற்றும் பணி நடைபெற்று வந்தது. அப்போது இடிபாடுகளுக்குள் பதுங்கி இருந்த 5 அடி நீள இரண்டு நல்ல பாம்புகள் மீது கற்கள் விழுந்து உயிரிழந்தன.
உயிரிழந்த பாம்புகளுள் ஒன்று ஆண், மற்றொன்று பெண் என தெரியவந்தது. அதில் பெண் பாம்பின் வயிற்றில் 25 முட்டைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், அப்பகுதயில் இருந்த மக்கள் பாம்புகளை புதைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தன்னார்வ பாம்பு மீட்பாளர் சகாதேவன் கூறுகையில், "இதுபோன்ற இடிபாடுகளில் தான் பாம்புகள் பெரும்பாலும் பதுங்கி இருக்கும். ஆகையால் அவற்றை அகற்றும் போது மிகுந்த கவனத்தோடு அகற்றினால் தான் அவற்றை உயிரோடு மீட்க முடியும். கருவுற்றிருக்கும் பெண் பாம்புக்கு துணையாக ஆண் பாம்பு உடன் இருந்துள்ளது.
இவ்விரண்டு நல்ல பாம்புகளும் அதன் இனத்தோடு தான் இணை சேரும். சாரைப்பாம்போடு நல்ல பாம்பு இணை சேரும் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மேலும், இதுபோல் பாம்புகள் இருப்பது தென்பட்டால் உடனடியாக எங்களைப் போன்ற மீட்பாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். நாங்கள் அவற்றை உயிருடன் மீட்டு காட்டுப் பகுதியில் கொண்டு போய் விட்டு விடுவோம்" எனக் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்தும் இளைஞர்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!