திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வியட்நாம், தோஹா உள்ளிட்ட முக்கிய வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், துபாயில் இருந்து இன்று திருச்சி வந்த விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வந்த UL 131 விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.
இந்தச் சோதனையில் பயணி ஒருவர், தான் எடுத்து வந்த மூன்று லக்கேஜ் டிராலி பையின் உட்பகுதியில் தங்கத்தை வயர் வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பைகளில் இருந்த 43 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 600 கிராம், அதாவது 75 சவரன் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, தங்கம் கடத்தி வந்த நபரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த நபரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை சென்ட்ரலில் பயணியின் கைப்பையை நைசாக லவட்டி சென்ற நபர்... போலீசில் சிக்கியது எப்படி? - Chennai Central Theft Issue