கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் 01.03.2024 முதல் 22.03.2024 வரை நடைபெற்ற நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 6) வெளியாகின. இதில், மொத்தமாக 7,60,606 மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதியிருந்தனர். இதில் 4,08,440 பேர் மாணவியர்கள், 3,52,165 பேர் மாணவர்கள், ஒருவர் மட்டும் மூன்றாம் பாலினத்தவர் ஆவார்.
இந்த சூழலில், நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராமவர்மா நேற்று வெளியிட்டார். இதில், மாநிலம் முழுவதும் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதன்படி, மாணவிகள் 3,93,890 பேர் என 96.44 சதவீதமும் மற்றும் மாணவர்கள் 3,25,305 பேர் என 92.37 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். இதுமட்டும் அல்லாது பொதுத்தேர்வு எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி அடைந்துள்ளார். இம்முடிவுகளின் படி, மாணவர்களை விட 4.07 சதவீதம் மாணவியர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8,243 மாணவர்கள் மற்றும் 8,955 மாணவிகள் என மொத்தம் 17,198 மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 7,478 பேர் என 90.72 சதவிகிதமும், மாணவிகள் 8,500 பேர் என 94.92 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 765 மாணவர்கள், 455 மாணவிகள் என மொத்தம் 1,220 போ் தேர்ச்சி பெறவில்லை.
கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.06 சதவீதம் தேர்ச்சி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம், தற்போது 1.85 சதவீதம் அதிகரித்து 92.91 தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும், மாநில அளவில் 30வது இடத்திலிருந்து தற்போது, 29-ஆவது இடத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் முன்னேறியுள்ளது.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 5 அரசுப் பள்ளிகள், 18 தனியார்ப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் தென் செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 589 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த நிலையில், மாணவிக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக சால்வை அணிவித்தும், கேடயங்களை பரிசாக வழங்கியும் பாராட்டுக்களைத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவி ஸ்ரீமதி, கடந்த 2022ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூரில் தனியார்ப் பள்ளியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "படிப்ப மட்டும் எடுத்துக்க முடியாது" - பிளஸ் 2 தேர்வில் அசத்திய நாங்குநேரி சின்னத்துரை!