சென்னை: சென்னை நீலாங்கரை அருகே வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் விவேக்(33). ஆட்டோ ஓட்டுநரான இவர் கடந்த 4ஆம் தேதி வீட்டிற்குச் செல்வதற்காக கிழக்கு கடற்கரைச் சாலை வெட்டுவாங்கேணி சந்திப்பில் எதிர்த்திசையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கு பணியில் இருந்த நீலாங்கரை போக்குவரத்து பெண் காவலர் பிரியா, இருசக்கர வாகனத்தின் சாவியை எடுக்க முயன்றுள்ளார். அப்போது விவேக் பெண் போலீசின் கையை தட்டிவிட்டு, ஆபாசமாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, போக்குவரத்து பெண் போலீஸ் பிரியா நீலாங்கரை காவல் நிலையத்தில் கடந்த 5ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் ஆபாசமாக பேசுவது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுப்பது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்த நீலாங்கரை போலீசார் சோழிங்கநல்லூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ஆட்டோ ஓட்டுநர் விவேக் மனு அளித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நடுவர் கார்த்திக் வித்தியாசமான நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
அதாவது, நிபந்தனையில் தினமும் நீலாங்கரை காவல் நிலையத்தில் ஆஜராகி காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் கையொப்பமிட வேண்டும் எனவும், மேலும் ஒரு வாரக் காலத்திற்கு வெட்டுவாங்கேணி சிக்னலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் சரி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து நேற்று முதல் நீதிமன்ற உத்தரவின் பேரில், விவேக் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது போக்குவரத்தை மீறிய வழக்கில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு சோழிங்கநல்லூர் நடுவர் நீதிமன்றம் வழங்கிய நூதன தண்டனையின் அடிப்படையில், ஆட்டோ ஓட்டுநர் போக்குவரத்தை சீர் செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்!