சென்னை: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை (RERA) ஆணைய தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் புதிய தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் கட்டடங்கள், மனைப்பிரிவு திட்டங்களை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த ஆணையம் தொடங்கப்பட்ட நிலையில், முதல் தலைவராக 2019ஆம் ஆண்டு முன்னாள் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்வுக் குழு அமைக்கப்பட்டு தேடுதல் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 1989ஆம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா, தமிழக தலைமை செயலாளராக இருந்த இறையன்புவின் ஓய்விற்கு பின்னர், கடந்தாண்டு ஜூன் மாதம் தமிழக தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். இவர் வரும் அக்டோபர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில், தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நெல்லையில் முதலமைச்சரின் தனிப்பிரிவு செயலாளர்களில் முதல் செயலாளராக உள்ள முருகானந்தம் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. 1991ஆம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான முருகானந்தம், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகுவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்