புதுக்கோட்டை: கடந்த சில நாள்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சல் காமலை அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக மாணவர்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள வயலோகம் கிராமத்தில் ஒரே தெருவில் வசித்த சுமார் 15 பள்ளி மாணவ, மாணவிகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதில் நித்தீஸ்வரன் (7) என்ற 3-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.
இந்தநிலையில் அன்னவாசல் அடுத்துள்ள பி.மேட்டுப்பட்டி தொடக்கப்பள்ளியில் கல்வி கற்கும் 6 மாணவர்கள் மஞ்சள் காமாலை அறிகுறியுடன் இலுப்பூர், புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட சுகாதார அலுவலர் ராம் கணேஷ் உடனடியாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மருத்துவ முகாம் அமைத்து மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தார். இச்சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆட்சியர் ஆய்வு: தொடர்ந்து மாவட்ட சுகாதார அலுவலரிடம் மாணவர்களுக்கான பாதிப்பு குறித்துக் கேட்டறிந்தார். அப்போது 'அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் ஊரணி தண்ணீரைப் பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வருவதாகவும், இது பெரியவர்களுக்குப் பாதிப்பு இருக்காது, ஆனால் சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்' என கூறினார்.
பின்னர் பள்ளிக்குள் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அருணா, அங்கு மாணவர்கள் அருந்தும் குடிநீரைப் பருகி ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் பாட்டிலையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவர்கள் பருகும் குடிநீரை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
மேலும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா நலம் விசாரித்த அவர், அப்பகுதியில் உள்ள அங்குள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்சியர் அங்கு பணியில் ஈடுபட்ட நபர்களைக் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் கேட்டபோது ,"6 மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும், அது மஞ்சள் காமாலைக்கான அறிகுறி காய்ச்சல் தான் எனவும் குடிநீருக்காக பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: அன்று கல்லிலே கலை வண்ணம்.. இன்று நூலிழையில் கைவண்ணம்... 'ஸ்ட்ரிங் ஆர்டில்' கலக்கும் சட்டக் கல்லூரி மாணவன்!