சேலம்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் சேலம் மாவட்டம், அயோத்தியபட்டணம் அடுத்த பருத்திக்காடு கோமாளி வட்டம் பகுதியில் உள்ள ஜெயக்குமார் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோனில் வேலை பார்த்து வந்தார். அனுமதி பெற்று நடத்தப்பட்டு வரும் இந்த பட்டாசு குடோனில், இன்று காலை நாட்டு வெடிகளை இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.
சேலம் பட்டாசு குடோனில் தீ விபத்து.. ஒருவர் பலி! #salem #fireaccident #crackers #etvbharattamil #accident pic.twitter.com/bGptxW8QBp
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) September 4, 2024
அப்போது கை தவறி கீழே விழுந்த நாட்டு வெடிகளால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஜெயராமன், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும், கார்த்திக், முத்துராஜ், பெருமாள் மற்றும் ஒருவர் என 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, இதே கோமாளி வட்டம் பகுதியில் ஜெயக்குமார் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோனில், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் மூன்று முறை வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாக செயல்படுத்தாததால் இந்த விபத்து நடந்துள்ளதாக விசாரணை மேற்கொண்டு வரும் வீராணம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் பட்டாசு வெடி விபத்து: ஆலை உரிமையாளர் கைது; இருவர் கவலைக்கிடம்!